தெளி தமிழ்
2007-09-27 by விருபா - Viruba |
0
கருத்துகள்
முனைவர் இரா.திருமுருகன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் சார்பில் 1993 இல் தொடங்கப்பட்ட 'நல்லதமிழ்' என்ற இதழானது, தற்பொழுது 'தெளி தமிழ்' என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவந்துகொண்டிருக்கிறது.
இவ்விதழ் அண்மையில் இணைய இதழாகவும் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதன் இணைய முகவரி www.thelithamizh.com ஆகும்.
முனைவர் இரா.திருமுருகன் அவர்கள் தமிழ்ப் பற்றாளர். பாவணர், பாரதிதாசன், இசைத்தமிழ் தொடர்பில் நூல்களை எழுதியுள்ளார்.
இதழின் முகப்பில் தமிழுணர்வுடன் கூடிய கவிதை இடம் பெறும், சென்ற இதழில் சென்ற இதழில் ம.இலெ.தங்கப்பா அவர்களுடைய கவிதை வெளியானது. இந்த இதழில் இரா.திருமுருகன் அவர்களுடைய கவிதையே இடம்பெற்றுள்ளது.
தமிழ் வாசகர்களுக்கு இத் தமிழ் வளர்ச்சித் திங்கள் இதழை அறிமுகப்படுத்துகிறோம்.
எஸ்.பொ 75 - மாயினி - யுகமாயினி
2007-09-26 by விருபா - Viruba |
8
கருத்துகள்
ஈழ எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் பவள விழா நிகழ்வாக 30.09.2007 அன்று சென்னை மயிலையில் இலக்கிய நிகழ்வும் புத்தக வெளியீட்டரங்கமும் ஏற்பாடு செய்யப்படுள்ளது. காலை 10:00 மணி முதல் இலக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் பாபு பரத்வாஜ் சிறப்பு முன்னிலை வகிக்க, பல தமிழ் இலக்கிய ஆளுமைகள் பங்கேற்கும் இந் நிகழ்வின் நிகழ்ச்சி நிரலை இங்கு பார்வையிடலாம்.
விழாவின் இறுதி அங்கமாக எஸ்.பொ அவர்களை நிறுவக ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'யுகமாயினி' என்னும் தமிழ் இலக்கிய மாத இதழும், 'எஸ்.பொ' வின் புதிய நூல்கள் மூன்றும் வெளியிடப்படவுள்ளன.
"முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம், கலகத்தில் மலரும் சுதந்திரம்" என்ற வாசகத்தை மையப் பொருளாகக் கொண்டு 'யுகமாயினி' இதழ் வெளிவரும். சித்தன் இதன் பொறுப்பாசிரியராக உள்ளார். இதழ் வெளியீட்டிற்கு முன்னோடியாக, வெளிவரும் இதழ் எந்தத் தாளுடன், தன்மையுடன் வெளிவருமோ அதே போன்ற தன்மையுடன் 50 மாதிரி இதழ்கள், முதல் இதழின் உள்ளடக்கங்களுடன் அச்சிடப்பட்டு, இலக்கிய தொடர்புடையோர் பலரிடம் கருத்துக்களும் பெறப்பட்டுள்ளன.
"பெருவணிகப் பத்திரிகைகள் மிக வேகமாக இலக்கியத்தை அற்ப நுகர்பொருளாக மாற்றி விட்டன. மொழியும், படைப்பு வீறும் விதையடிக்கப்படுகின்றன. புதிய படைப்புக்களுக்கும் பிரசுர களங்கள் அருகிவிட்டன. தரமான இலக்கியத்தை முன்னெடுப்பதாகப் பரப்புரை செய்யும் சிறு பத்திரிகைகள், குழுநலம் பேணி சுய அரசியலில் முடங்கிக் கிடக்கின்றன. தமிழ்க் கலை - இலக்கிய நிகழ்வுகள் உலகளாவியதாக விசாலித்துள்ள நிலையில், அவை பற்றிய பதிவுகள் தமிழ்ச் சுவைப்புக்கும் அக்கறைக்கும் கிடைப்பதில்லை.
இலக்கியம் பற்றிய உண்மையின் தேடலாக அமையும் சிந்தனைகளையும், விவாதங்களையும், விமர்சனங்களையும் முன்னெடுக்கும் முனைப்புகள் மறைந்து வருகின்றன. உலகளாவியதாக விரிந்துள்ள தமிழ்ப் படைப்புகளுக்கு பிரசுர களமாக புத்தாயிரத்தின் பொற்பதங்களை உள்வாங்கி, கலை-இலக்கியம் சம்பந்தமான குழுசாராத, ஆரோக்கியமான, நேர்மையான எழுத்துச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு நடுப் பத்திரிகையாக, உலகளாவிய தமிழ் கலை-இலக்கிய நிகழ்வுகளின் வரலாற்று ஆவணமாக ஒரு பத்திரிகை வெளிவருதல் அவசியம் என உணரப்படுகின்றது.
முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம், கலகத்தில் மலரும் சுதந்திரம் கருத்துத் திணிப்பு அல்ல - கருத்துப் பகிர்தல்.
இலக்கியப் படைப்பின் பரப்பையும் சுவைப்பையும் அகலித்தல்.
இவற்றைத் தமிழ் செய்ய யுகமாயினி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்."
என்கிறார் முதல் இதழில் இதன் நிறுவக ஆசிரியர் எஸ்.பொ.
யுகமாயினி ஆசிரியர் குழு.
ஜெயந்தி சங்கர் - சிங்கப்பூர்
நிலா - லண்டன்
மதிஅழகன் - டொரண்டோ
ரெ.கார்த்திகேசு - மலேசியா
ராஜ்ஜா - புதுச்சேரி
தமிழச்சி - சென்னை
பாலு தென்னவன் - சென்னை
பழமலய் - விழுப்புரம்
கழனியூரான் - திருநெல்வேலி
கம்பீரன் - திருச்சி
யுகமாயினி ஆலோசனைக் குழு
இந்திரா பார்த்தசாரதி
இன்குலாப்
சிற்பி
வா.மூர்த்தி
தர்மகுலசிங்கம் (டென்மார்க்)
வி.கே.டி.பாலன்
புதிய நூல்கள் பற்றிய பதிப்பாளரின் அறிமுகக் குறிப்புகள்.
1. மாயினி
தமிழில் முதல் அரசியல் நாவல்.
இலங்கை அரசியலில் பிரதான பாத்திரம் வகித்த தமிழ், சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்நாவலில் நடமாடுகிறார்கள்.1996 இல் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் நடைபெற்ற வன்னிப் புலப்பெயர்வை இந்நாவல் பிரதான களமாகக் கொண்டுள்ளது. விந்தையான சித்த வைத்திய சூரணம் ஒன்றின் மூலம் சென்ற காலத்தினூடாக பயணிப்பதாக கற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்று நூற்றாண்டுகளை அடக்கிய பண்டார நாயக்கா குடும்ப வரலாறு அரிய பல தகவல்களுடன் இந்நாவலில் சொல்லப்பட்டுள்ளது.
தமிழ்த் தலைவர்கள் தமிழ்த் தேசியத்தைப் பற்றி நினைக்கவில்லை என்றும், அடுத்தடுத்து சிங்கள அரசியல் வாதிகள் மேற்கொண்ட தமிழினத் துடைப்புச் சட்டங்களின் எதிர்வினையாகவே தமிழர் தேசியம் தோன்றியது என்றும், இந்நாவல் கூறுகிறது. அரசியல்வாதிகள் சிலருடைய அந்தரங்க வாழ்கையின் நிகழ்வுகள் பல துடிச்சலுடன் இதில் கையாளப்பட்டுள்ளது. தமிழர் தேசியத்தை முன்னெடுக்கும் உணர்வாளர்களுக்கும், உபாசகர்களுக்கும், ஊழியர்களுக்கும் இந்நூல் சமர்ப்பணமாகியுள்ளது.
தீ என்ற தனது முதலாவது நாவல் மூலம் இலக்கிய உலகில் சலசலப்பு ஏற்படுத்திய எஸ்.பொ, மாயினி மூலம் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. உதாரணமாக ஸ்ரீமாவோவிற்கும் மகன் அனுரவிற்கும் நடை பெறும் உரையாடலைச் சொல்லலாம் 'நீ என் மகன் ஆனால் பண்டார நாயக்காவின் மகன்தானா என்பதை அறுதியிட்டுச் சொல்லதுடியாது'. இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் நிலை கொண்டிருந்த பொழுது நடைபெற்ற நிகழ்வுகள் பல இந்நாவலிலே நுட்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
2.மணிமகுடம்
இலங்கைத் தீவின் கரையோர மாகாணங்கள் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட பின்னரும் 300 ஆண்டுகள் சுதந்திரத்தை காப்பாற்றிய வீர வரலாறு கொண்டது கண்டி நாடு. இக் கண்டி நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பதிலே கண்டியை ஆண்ட தமிழ் மன்னர்களுடைய பங்களிப்பு சிறப்பானது. கண்டியின் சிங்களப் பிரதானிகளுடைய சூழ்ச்சிகளாலும், அன்னியருடைய ஆட்சியை அவாவிய துரோகத்தினாலும் தான் கண்டி நாடு தன் சுதந்திரத்தை இழந்தது.
இத்தகைய ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் 1814 ஆம் ஆண்டு நடை பெற்ற சரித்திர நிகழ்வுகளின் ஓர் ஆவணமாக மணிமகுடம் திகழ்கின்றது. இவ்வரலாற்று நாவலின் பிறிதொரு சிறப்பம்சம் என்னவென்றால் நவரசங்களின் ஒவ்வொரு சுவையையும் ஒவ்வோர் அத்தியாயத்தில் முதன்மைப் படுத்தும் வகையில் ஒன்பது அத்தியாயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மதுரகவி இ.நாகராஜன் மூன்று அத்தியாயங்களையும், ரசிகமணி கனக செந்திநாதன் மூன்று அத்தியாயங்களையும் எழுத, கடைசி மூன்று அத்தியாயங்களை எழுதி எஸ்.பொ இந் நாவலை முழுமைப்படுத்தியுள்ளார்.
இன்று சிங்கள இன அரசியலால் திருத்தி சரித்திரம் எழுதப்படும் நிலையில், கண்டி அரசின் அஸ்தமன நாட்கள் உரிய முறையில் அறிந்து கொள்வதற்கு இந்த நாவல் உதவுகின்றது. ஈழத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற தமிழ் இலக்கிய கூட்டு முயற்சிகளின் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இந் நூல் தமிழிற்குக் கிடைத்துள்ளது.
3.தீதும் நன்றும்
கணியன் பூங்குன்றனின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற முதல் வரியை அறியாத தமிழர் இல்லை எனலாம். இதனையே தனிநாயகம் அடிகளார் உலகத் தமிழ் அக்கறைகளின் மையக் கோஷம் ஆக்கினார். சர்வதேசிய ஆய்வு அரங்குகளில் இவ்வாசகம் மையப்படுத்தப்படுகிறது. இக்கவிதையின் இரண்டாவது வரி 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதாகும்.
ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரனுடன் எஸ்.பொ நடத்திய இலக்கிய உரையாடலே 'தீதும் நன்றும்' என்ற மகுடத்தில் வெளிவந்துள்ளது.எஸ்,பொவின் 'வரலாற்றில் வாழ்தல்' என்னும் சுயசரிதை சுமார் 2000 பக்கங்களிலே வெளிவந்துள்ளது. அந்நூலில் அவர் குறிப்புட்டுள்ள பல கருத்துக்கள் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும் பல ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டிருந்தன, இலக்கிய சேமம் கருதி இந்த சந்தேகங்களுக்கு நேரிய விடைகள் தேவை, இந்த விடைகளைக் காணும் ஒரு இலக்கிய முயற்சியாகவே 'தீதும் நன்றும்' நூல் அமைந்துள்ளது. இதனை ஒரு நேர்காணலாக எஸ்.பொ வகைப்படுத்தவில்லை. எழுப்பப்டும் வினாக்களுக்கு விளக்க விடைகள் அளிக்கும் ஒரு இலக்கிய முயற்சியாகவே அவர் கணிக்கின்றார்.
பிறிதொரு வகையில் 'வரலாற்றில் வாழ்தல்' குறித்த இலக்கிய உரையாடலாகவும் இது தரிசிக்கப்படலாம். 20 நூற்றாண்டின் ஈழ தமிழ் இலக்கிய வரலாற்றை அறிய விரும்பும் ஆய்வு மாணவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் 'தீதும் நன்றும்' ஒரு கையேடாக பயன்படவல்லது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)